Saturday 29 November 2014

தூய்மை இந்தியா( தூசி இந்தியா)

எங்காவது யாராவது ஒரு நிகழ்ச்சி நடத்தினால் உடனே அதை பின்பற்றுவது போல் காண்பித்துக் கொள்வதில் தான் நம் மக்களுக்கு எவ்வளவு ஆர்வம்...ஆசை....அடடா..

அதைத் தான் என் பள்ளியும் செய்தது. அந்த அழகிய கொடுமையைக் கேளுங்களேன்

என் பள்ளி ஆயாக்களை வைத்து மிகக் கடுமையாக வேலை வாங்கி ஓரளவுக்குத் தூய்மையாகத்தான் இருக்கும். ( எங்களைப் போல் பிள்ளைகளை வைத்துக் கொண்டு அவர்கள் தூய்மை கடைபிடிப்பது மிகப் பெரிய வல்லரசைக் கட்டி ஆள்வது போலத்தான்) சரி நிகழ்ச்சிக்கு வருவோம்

அன்று.....

அனைத்து ஆசிரியர்களும் ஒரு சிறிய பாலிதீன் கவரில் குப்பைகளைக் கொண்டு வந்தனர். அதைக் பார்த்ததும் எனக்குள் குழப்பமாக இருந்தது. ( பிரேயருக்கு முன்)

எப்போதும் தூய்மையான மைதானத்தில் நின்று பிரேயர் பாடும் நாங்கள் அன்று சிறிது குப்பைகளுக்குள் நின்று பாடினோம்.


வழக்கம் போல் அசெம்பளி ஆரம்பிக்கப்பட்டது. நமது பாரதப்பிரதமர் தூய்மை இந்தியா என்று சொல்லி இருக்கிறார். எனவே நாமும் தூய்மையாக இருக்க வேண்டும். நமது சுற்றுப்புறத்தை நாம் தூய்மையாக  வைத்துக் கொள்ள பாடுபட(? )வேண்டும் என்று ஒரு நீநீநீண்ண்ண்ண்ண்ண்ட பிரசங்கம் செய்தார். ( தூய்மைக்கும் அவர் பிரச்ங்கத்திற்கும் அவ்வப்போது சம்மந்தம் இருக்கிறார்போல் பார்த்துக் கொண்டார்.)

இப்போது நாம் தூய்மை செய்யப் போகிறோம் என்று சொல்லிவிட்டு.. மேலும் கொண்டுவந்திருந்த குப்பைகளை ஆங்காங்கே தூவி விட்டதோடு மாணவர்கள் சிலரை சாக்லேட்  சாப்பிட வைத்து அதையும் அங்கேயே போட வைத்தார்கள்

 (மற்ற நேரத்தில் தெரியாமல் ஒரு சிறு காகிதம் போட்டால் கூட” உங்களுக்கு யார் மீதும் இரக்கம் இல்லையா? ஒருவர் இதனை தூய்மை செய்ய என்ன பாடுபடுவார்?” என்று தேர்வு சமயங்களிலும் நிற்க வைத்து அட்வைசி நேரம் தின்பார்கள்.

ஆனால்  பல மாணவர்கள் முடிந்த அளவு தங்கள் பைகளில் இருந்த குப்பைகளைக் கொண்டு வந்து போட்டனர். பிறகு ஒரு ஆசிரியர் காபி குடித்து அங்கேயே பேப்பர் கோப்பைகளைப் போட்டார.

இப்படியாக போட்டவைகளை மாணவர்களே அள்ளினர். பல நிருபர்கள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களில் பணிபுரியும் அண்ணன்களும் சித்தப்பாக்களும் அதனை பல்வேறு கோணங்களில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மாணவிகளை  ” பாப்பா”  என விளித்து அப்படி பார்..இப்படித்திரும்பு...அங்கே பார்த்து நில் என்று பல்வேறு கட்டளைகளோடு...

மாணவ மணிகளும் எங்கே தனது புகைப்படம் அல்லது வீடியோவை தூய்மை இந்தியா திட்டம் அறிவித்த பிரதமர் மோடி அவர்களே கண்ணுற்று பாராட்டப் போவது போலவே “போஸ்” கொடுத்துக் கொண்டிருந்தனர்.  பல பேர் இரண்டு பீரியட் வீணானது குறித்து மகிழ்வுடன் காணப்பட்டனர். ஒரு மாணவன் கொரில்லாவிடமிருந்து தப்பித்தேன் என்று சப்தம் போட்டு சொல்லிக் கொண்டே  மகிழ்வாகக் காண்ப்பட்டான்.

( எங்கள் பள்ளியில் அனைத்து ஆசிரியர்களுக்கும் அவர்கள் அப்பா அம்மா வைத்த பெயர்தவிர இப்படியும் சில அன்பு வார்த்தைகளால் மாணவ மணிகளால் நாமகரணம் சூட்டப்பட்டு அன்போடு அழைக்கப்படுவார்கள் )

ஒரே ஒரு நன்மை மாணவர்கள் பலரில் தங்கள் பைகளை சுமந்து மட்டும் தான் வருவார்கள் அதனுள் என்ன இருக்கிறது என்று அவர்களுக்கே தெரியாது. அன்று அதைக் கண்டு” தெளிந்தனர்.”

ஏன் இந்த வேண்டாத வெட்டி வேலை?

(மீடியாக்கள் பல செய்திகளை இப்படித்தான் வெளியிடுகிறதோ?)

மறுநாள் அவ்ளோ பெரிய செய்தித்தாளில் ஒரு சிறிய (வள்ளுவரின் திருக்குறளை விடச் சிறிதாக ) செய்தி வந்ததால் இவர்கள் நாட்டுக்கோ அல்லது எங்களுக்கோ அறிவிக்க விரும்புவதும் தெரிவிக்க விரும்புவதும் என்ன?
 பொதுத் தேர்வுக்குத் தயாராகும் நிலையில் எங்களுக்கு இந்த நேரத்தை வீணடித்தது சரியா? ( படிக்க என்று நேரம் ஒதுக்கி விட்டு அந்த நேரத்தை இவர்களே பறித்துக் கொண்டார்களே)

இதையே நாங்கள் மட்டும்செய்திருந்தால் நீ எல்லாம் எதுக்கு ஸ்கூல் வரே????சே! வெட்டி தெண்டம் என்று திட்டும் இவர்களை யார் வெட்டி தெண்டம் என்று திட்டுவார்கள்?????

 
                                            

No comments:

Post a Comment