Sunday, 27 September 2015

பெண் உரிமைகளும் உதாசீனங்களும்

பெண் உரிமைகளும் உதாசீனங்களும் எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரை எனது சொந்தப் படைப்பே எனச் சான்றளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும் போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்


 “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது


வகை மூன்று பெண்கள் முன்னேற்றம் பற்றிய கட்டுரைப் போட்டி

***************************************************************

பெயர்:செ.சக்தி
வயது:17
கல்வித்தகுதி:B.E.(I year)
முகவரி:சென்னை..600042
*****************************************

பெண் உரிமைகளும் உதாசீனங்களும்
******************************************

     பூத்துக்குலுங்கும் பூந்தோட்டத்துடன் மட்டுமே பெண்களை ஒப்பிடும் இந்த உலகில் பெண்களை பெருந்தெய்வமாக பாவிக்கும் ஒரு சிலர் மட்டுமே பெண்ணியம் பேசுகிறோம்.இல்லை பேசிக் கொண்டு மட்டுமே இருக்கிறோம்.

   மேல் நாட்டில் ஒரு வழக்கு உண்டு WHAT EXIST FOR MAN IS DEMANDED FOR WOMEN.. அதாவது சராசரியாக ஒரு ஆணுக்கு கிடைக்கும் உரிமை பெண்ணுக்கு கிடைக்கவேண்டுமானால் மிகப்பெரிய போராட்டமே நடத்தப் பட வேண்டும்.

சமீபத்தில் ஒரு வழக்குக்குக் கிடைத்த தீர்ப்பை படித்துவிட்டு பெண்ணுரிமை பேசவே பயமாக உள்ளது அந்தத் தீர்ப்பு கூறுவது இதைத்தான், கணவனிடமிருந்து ஜீவனாம்சம் வாங்கும் ஒரு பெண் உடலுறவே வைத்துக் கொள்ளக்கூடாது . ஒரு பெண்ணின் சராசரி உணர்வைக் கூட சட்டத்தாலும், இது போன்ற தீர்ப்புகளாலும் கட்டிப் போட நினைக்கும் இந்த சமூகத்தில் பெண் உரிமக்காக அல்ல, பெண் ஒரு மனிதப்பிறப்பு என்று நிருபிப்பதற்கே போராட வேண்டும் போல .

 ஒரு பதினெட்டு வயதுப் பெண் ஒன்பது மணிக்கு  பக்கத்தில் உள்ள பெட்டிக்கடைக்குப் போக வேண்டும் என்றால் கூட அவளது ஐந்து வயது தம்பியைத் துணைக்கு அனுப்புகிறார்கள். பையனாகப் பிறந்ததாலேயே அவன் ஐந்து வயதிலேயே வீரனாகவும் இவள் பதினெட்டு வயதிலும் கோழையாகவும் பிறரைச் சார்ந்து வாழும் பிறவியாகவும் கற்பிக்கப் படுகிறாள். இவர்களைச் சொல்லி குற்றமில்லை. இந்த சமூகத்தில் ஆணுக்கு ஒரு நியதியும் பெண்ணுக்கு ஒரு நியதியுமே வகுக்கப்பட்டுள்ளது.

பேருந்து நிறுத்தத்தில் ஒரு ஆண் தனியாக நின்றால் அது ஒன்றும் அசாதாரணமாக காட்சி அல்ல. இயல்பாக அதைக் கடந்து அனைவராலும் செல்ல முடிகிறது. ஆனால் அதே ஒரு பெண் நின்றால் அவள் சந்திக்கும் பார்வைகளையும், எதிர்கொள்ள வேண்டிய வார்த்தைகளையும் வரிகளில் கொண்டு வர முடியாது. அவளின் சுழ்நிலைக்கான விளக்கங்களை இவர்களே உருவாக்குகிறார்கள்.

பொது இடங்களில் மட்டுமல்ல. ஆணும் பெண்ணும் சரிநிகர் சமம் என்று சொல்லும் பள்ளி கல்லூரிகளிலும் இதே நிலை தான்,
கல்லூரி பேருந்தில் மாணவர்கள் எவ்வலவு சத்தம் போட்டாலும் அமைதியாக வரும் பேராசிரியர்கள் மாணவிகள் சற்றே குரலை உயர்த்திப் பேசினால் கூட “பொமபளப் பிள்ளையா லட்சணமா இல்லாம இதென்ன இப்படி சத்தம் போடுறீங்க” - என்றே பெண்கள் லட்சணத்தை இவர்களே நிர்ணயம் செய்கிறார்கள்.

தெருவில் நின்று நான்கு ஆண்கள் பேசினால் பலருக்கும் அவர்களின் கல்லூரி காலம் மலரும் நினைவுகளாய் மனதில் மலரும். ஆனால் அதுவே நான்கு பெண்கள் கூடித் தெருவில் நின்றால் கூட “எங்க காலத்துலல்லாம் பொண்ணுங்க இப்படி இல்லப்பா” என்கிறார்கள். இப்போது ஏதோ நாங்கள் பிசாசுகள் ஆகிவிட்டது போல.

கண்ணுக்குத் தெரிந்த ஒரு எதிரியை போரிலே வீழ்த்தும் வீரனுக்கு பாடாண் திணை பாடும் இவர்கள் கண்ணுக்குத் தெரியாத ஆயிரம் எதிரிகளை தினம் தினம் வீழ்த்தும் பெண்ணுக்கு ஒரு திணையும் பாடாவிட்டாலும் வஞ்சப் புகழ்ச்சியாவது செய்யாமல் இருக்கலாம்

ஆண்க ள் தங்கியிருக்கும் ஒரு அறை குப்பைக் கூடை போல் இருந்தாலும் “பேச்சுலர்ஸ் ரூம்” என்று பெருமையாக குறை சொல்லும் சமூகம் பெண்கள் நால்வர் தங்கி இருக்கும் விடுதி அறையில் ஒரு காகிதம் குப்பைத் தொட்டியை விட்டு வெளியே வந்தால் கூட ”நாலு பொம்பளப் பிள்ளைங்க இருக்கீங்க, இதைக் கூட சுத்தமா வச்சுக்க மாட்டீங்களா நாளைக்கு எப்படித்தான் குடும்பம் நடத்தப்போறீங்களோ என்று குடும்பம் நடத்தவே பிறந்த ஜந்துகள் என்றே பெண்களை நிர்ணயித்து விட்டார்கள்.

 பெண்ணீயம் “ பேசும்” எத்தனையோ வீடிலும் பையனை கராத்தே வகுப்பிற்கும் பெண்ணை பரத நாட்டிய வகுப்பிற்கும் அனுப்பும் விந்தை அரங்கேறிக் கொண்டு தான் இருக்கிறது.
ஆண்களின் நக்கல்கள் “ஹூயுமர் சென்ஸ்’ என்றும் அதுவே பெண்பாலில் துடுக்குத் தனம் என்றும் திருநாமம் சூட்டப்படுகிறது

பெண் முன்னேற்றம், பெண் விடுதலை என்று வாய் ஓயாமல் பேசும் பலரும் எட்டாம் வகுப்பு முடித்ததும் பெண் குழந்தைகளுக்கு சமையல் பயிற்சி ஆரம்பித்து விடுகின்றனர். 21 வயதில் திருமணம் முடித்து அடுப்படியில் வேக ஆரம்பித்த பெண்ணை இறந்த பின் நெருப்பில் வேக வைக்க வேண்டிய அவசியம் இருக்காது. அவள் ஏற்கனவே வெந்து தணிந்திருப்பாள். சமையல் நெருப்பால் மட்டுமல்ல. வார்த்தை நெருப்புகளாலும்,

நக்கண்ணை என்னும் பெண்பாற் புலவெ தம் கவிதையில் ஒரு மன்னனின் வெற்றியைப் பாடி வாழ்த்தி இருக்க அதுவே அவன் மீது கொண்ட காதலால் தான் பாடப்பட்டது என்றே புனையப்படுகிரது

இதே போல் தான் பாபரை முன்னிறுத்தி அவர் அத்தை செய்த ஆட்சியை வரலாறு பாவாடை ஆட்சி என்றே வர்ணிக்கிறது. ஆனால் நாங்கள் பீனிக்ஸ் பறவைகள் . ஆயிரம் அல்ல . நூறாயிரம் முறை எரித்தாலும் மீண்டும் எழுந்து வருவோம்.

ஆண்களும் ஆணாதிக்கமும் நிறைந்த சமூகத்திற்கு ஒரு சிறிய வேண்டுகோள். இனி நதிகளுக்கு பெண்ணின் பெயர் வைக்காதீர்கள். இனி நீங்கள் தூக்கி வீசும் குப்பைகளையும் உங்கள் அசுத்ததையும் நாங்கள் சுமந்து கொண்டிருக்க மாட்டோம். பெரும் கடலாய் பேரலைகளோடு உங்கள் வெற்றிகளால் இவ்வுலகை ஆக்கிரமிப்போம்.

 ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். பெண்களால் மட்டுமே அன்பில் அன்னை தெரசாவாகவும், கம்பீரத்தில் ஜான்ஸி ராணியாகவும் திகழ முடியும்.

இனி ஒவ்வொரு பெண்ணும் மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா என்ற வரிகளுள் உள்ள உண்மையை உணர வேண்டும். நாங்கள் பெண்கள். வானம் பார்த்த பூமியாக அல்ல. வானத்தை ஆக்கிரமிக்கும் நட்சத்திரங்களாக ஒளிர்வோம். உலகுக்கே வழிகாட்டுவோம்                                      


                                                   
*********************************************************************************

No comments:

Post a Comment