Friday, 25 December 2015

அம்மாவிற்கு ஒரு கடிதம்

அன்புள்ள அம்மா...

தலைமை ஆசிரியர் என்ற மதிப்பு மிகு பதவியில் இருக்கும் உங்களுக்கு பொறுப்புகளும் கடமைகளும் அதிகம்.அதோடு கவிஞர், பேச்சாளர்,தொண்டு செய்பவர், இயக்க வாதி.என்று வெளியோருக்கும் .தாய்..மனைவி,மகள்,மருமகள்..தோழி என்று நெருக்கமாய் உணரும் சிலருக்குமாக பன்முகம் உங்களுக்கு

மகளாகவும் மாணவியாகவும் மட்டுமே இருக்கும் நான் எழுதிக் கொள்கிறேன்

இது கண்ணீரா? வருத்தமா? கவலையா? வேதனையா? என்ன என்று எனக்கே தெரியவில்லை அம்மா..

எப்போதும் நீங்கள் சிரித்துக் கொண்டே இருக்கிறீர்கள்..உங்கள் போராட்ட வாழ்வில் வேறு யாரேனும் இருந்தால் என்ன செய்வார்களோ என்று பயம் கொள்ளும் அளவுக்கு உங்கள் துணிச்சலும், விவேகமும் பாராட்டத் தக்கது..எது இருந்த போதும் கம்பராமாயண ராமர் போல உங்களால் மட்டுமே அன்றலர்ந்த மலர் போல் இருக்க முடியும்.

மன்னிக்க வேண்டும் அம்மா..என்னால் எல்லா விஷயங்களையும் கடக்க முடியும் உங்களைப்போல ஆனால், நீங்கள் இல்லாமல் என்னால் எதுவும் செய்ய இயலவில்லை.இந்தத் தோல்வியை நான் ஒப்புக்கொள்ளவே வேண்டும்.

சிறு வயதில் நான் பிறந்தது முதல் உங்களோடு நானும் உங்கள் பள்ளிக்கு பயணமாகி இருக்கிறேன்..இரண்டு பேருந்துகள் மாறி, ஒரு வண்டியில் நீண்ட தூரம் செல்லும் சாலையில்,முன் பகுதியில் எனை அமர வைத்து, இரு சக்கர வாகனத்தில் ஏதேதோ என்னோடு பேசிக் கொண்டே  வருவீர்கள்..

வீடு வந்ததும், வந்த களைப்போ, வேலைப் பளுவின் சுமை ஏதுமின்றி வீடு பராமரிப்புப் பணிகள்,,

கெடுக சிந்தை கடிதிவள் துணிவே என்று ஒரு புறநானூற்றுப் பாடலை மனப்பாடப்பாடலாக வைத்திருந்தார்கள். அது போல் தான் உங்கள் மனமும்...அடேங்கப்பா..இடர்கள் வந்த பொதெல்லாம் எழுந்து நின்றதை,,எந்த தடங்களும் இன்றி கடந்து போனதை, கண்ணால் பார்த்து அயர்ந்திருக்கிறேன்..நானே இப்படி என்றால் உங்கள் நட்பு வட்டங்கள் உங்களைக் கண்டு வியந்ததில் ஆச்சர்யம் இல்லை``

தலைமை ஆசிரியர் கூட்டங்கள், கம்பன் கழகம், இலக்கியக் கூட்டங்கள், ஏன் சில முறை பட்டிமன்றங்களில் மேடையில் என்னை அமரவைத்து பேசுவீர்கள்..

அப்போதெல்லாம் அம்மாவிற்கு என்னைப் பிரிய முடியவில்லை என்று மகிழ்ந்திருக்கிறேன்..ஆனால் பின்நாளில் என்னை கவனிக்க யாருமே இல்லை என்ற வலியை நான் உணர்ந்த போது, அதனையும் நீங்கள் ஒரு சாதாரண விஷயமாகத் தான் எடுத்துக் கொண்டீர்கள் எனும் போது..அம்மா...அம்மா...வலிகளின் ரணம் என் கண்களின் வழியாக கசிந்து பெருகும்..

அம்மா...
உங்களிடம் குழந்தைகளை ஹாஸ்டலில் சேர்த்து விட்டு புதுகைக்கே வாருங்கள் என்றும் இந்த அரசு வேலை தான் உங்களின் அடையாளம் என்றும் சிலர் சொன்னதாகச் சொல்கிறீர்கள். உங்களின் நண்பர்களில் ஒருவர் தான் அருமை அருமையாக வளர்த்த மகளை விடுதியில் விட்டிருப்பதாகவும், உங்களுக்கு பலரும் பல வித அறிவுரைகள் வழங்கியிருப்பதாகவும் அறிகிறேன்..

நானும் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்..

 ஒரு மருத்துவமனைக்கு வரும் நபர்கள் அனைவருக்கும் இடது பக்கம் நிற்கும் அனைவருக்கும் இந்த மருந்து சாப்பிடுங்கள் என்றோ,,வலது பக்கம் நிற்கும் அனைவரும் இந்த மருந்தை உட்கொள்ளுங்கள் என்றும் எந்த மருத்துவரும் சொல்லக் கேட்டிருக்கிறீர்களா? ஒவ்வொருவரின் உடல்நலம், மற்றும் தாங்கும் சக்திக்குத் தகுந்தாற்போல் தான் மருத்துவம் பார்க்க இயலும் அது போல் தான். செல்வத்தால் செழித்துப் பிறந்த மகள் என்றாலும் அவர் விடுதியில் தங்க வைத்திருப்பதும் நான் உங்களோடு இருக்க நினைப்பதும்.

தன் மகளை விடுதியில் விட்டிருக்கும் பட்டியல்கள் நீள்கிறது. உங்கள் தோழமைகளிடமிருந்து..,,,,அந்த மருத்துவ நண்பரோ,,அந்த தலைமைஆசிரியரோ,அந்த பேராசிரியரோ,அந்த பொறியாளரோ, அறிய மாட்டார்கள் என் மன உணர்வுகளை..


மருத்துவ விடுப்பு தொடர்ந்து எடுக்க இயலாமல் ஒரு மாதம் முழுதும் திங்கள் முதல் வெள்ளி வரை நீங்கள் அங்கேயும் நானும் பாப்பாவும் இங்கேயும் இருந்ததும், எனக்கென பாப்பா சமைத்து, நாங்களே தலைசீவி, இதெல்லாம் செய்ய வேண்டியது தான் என்றாலும், நீங்கள் இருந்து இவைகளை நான் செய்தால் அது உங்களுக்கு நான் செய்யும் உதவி. நீங்கள் இல்லாமல் அதனை நான் செய்தால் அது கொடுமை இல்லையா?

அம்மா,,,,

உங்களைப் பிரிந்து வாழும் அளவுக்கு மனப்பகுவம் வாழ்க்கை நெறி முறைகளையும் அதிகம் படித்து விட்டேன் என்றோ, மனதிடம் கொண்டு விட்டேன் என்றோ நீங்களாக நினைத்துக் கொண்டீர்களா என்ன?

பள்ளிப் பாடங்களோடு பிற விஷயங்களில் என் கவனமும் கனிவும் அதிகரித்திருப்பதும் ஆழமான , அகலமான விசாலப் பார்வைகள் கொண்டிருப்பதும் அப்படி அவர்களை அல்லது உங்களை நினைக்க வைத்திருக்கிறதா என்ன???

கல்லூரியின் அறிவிப்புப் பலகையில் என் புகைப்படத்தோடு முதல் மதிப்பெண் வாங்கியவள் என்று போட்டிருந்ததை நீங்கள் பார்த்த போது உங்கள் கண்கள் மின்னிய பொழுதுகள் நான் ...மிதந்தேன் அம்மா..

கல்லூரியின் முதல்வர் முதல் இயற்பியல், வேதியல்,கணிணி, கணிதம்,பேராசிரியர்கள் உங்களை வரவேற்ற விதமும், உங்களைக் கொண்டாடிய விதமும் ,,அம்மா உங்களுக்கு என்று எப்போதும் ஒரு மதிப்பும் மரியாதையும் உண்டு. உங்களை பெரும் பதவிகளில் இருப்போர்களும் பார்க்கும் பார்வைகளும் பழகும் விதமும் கண்டிருக்கிறேன் என்றாலும் இப்போது எங்கள் கல்லூரியில் உங்களை நடத்தும் விதம் என்னால் வந்தது என்பதில் தான் எனக்கு எவ்வளவு பெருமையும் கர்வமும் தெரியுமா அம்மா. அது நான் மறைமுகமாக உங்களுக்கு கிரீடம் தந்த பொழுதுகள்..

என் அப்பாவும் இல்லாமல்(அப்பா வெளிநாட்டில் வேலைக்குப் போய்விட்டதால்)), உங்கள் சொந்தம் யாரும் இல்லாமல் நீங்களாகவே எனை, எங்களை, வளர்த்த அந்த நிமிடங்களுக்கெல்லாம் நான் என்ன செய்து விட முடியும்? இப்படி மரியாதை பெற்றுத் தருவதை விட..

அம்மா..

பிரிவின் வலிகள் பெரிது அம்மா..

அவ்வப்போது  அப்பா வந்து போனாலும், அப்பாவின் மேல் பிரியங்களை நாங்கள் கொண்டிருந்தாலும்,,உணர்வுகளை உங்களுடன் மட்டுமே பகிர முடியும் என்பதை உணர்வீர்கள் என்றே நம்புகிறேன்..

உங்கள் சமையல் பற்றியோ உங்கள் அழகைப் பற்றியோ, உங்கள் எழுத்துக்கள் பற்றியோ நாங்கள் கிண்டல் செய்வதெல்லாம் நிஜம் இல்லை..

உன் அம்மா ரொம்ப அழகா இருக்காங்க டீ. என்று ஒரு தோழி சொன்ன போது, மற்றோரு தோழி அவங்க பெரிய கவிஞர் டீ,,பேச்சாளர் டீ என்று சொல்லிக் கொண்ட போது எனக்குள் ஏதோ பூத்தது...உணர்ந்தேன்..

என் பள்ளியில் நீங்கள் என் ஆசிரியர்களோடு உரையாடும் விதமும் அவர்களையும் அறியாமல் உங்களை அதிக மதிப்பாய் பார்க்கும் போதும் எனக்குள் பெருமை பூக்கும். என் பள்ளி முதல்வர்கள் அனைவருமே உங்களிடம் கொண்டிருக்கும் மரியாதையை மற்றொரு பெற்றோரிடம் காட்டுவதில்லை என்பது நான் கண்ட உண்மை..

நேசிப்பு என்பது அழகு ஆற்றல், அறிவு, புத்திசாலித்தனம், சாமர்த்தியம் என்று எல்லாவற்றாலும் எடுத்துக் கொள்ளப்படுவது என்றால் நான் எல்லாவிதமாகவும் உங்களிடமிருந்து எடுத்துக் கொள்கிறேன்..

என் பிரியத்திற்குரிய அம்மா,,

எனது கோரிக்கைகள் முற்றிலுமாக சுயநலமாக இருக்கலாம்..எனது வேண்டுதல்கள் உங்களுக்கு ஒவ்வாமைக் கூடத்தரலாம். ஆனால், என் பிரியத்திற்கு செவி சாய்ப்பீர்கள் என்றே நம்புகிறேன்..

போதும் அம்மா..நாங்கள் பிரிந்து கிடந்ததும், தவித்து பிரிவதும்..

இனி இங்கேயே இருந்து விடுங்கள்..

சமையல், சாப்பாடு, இருப்பிடம், என்று எதுவும் இல்லை எங்கள் பிரச்சனை உங்கள் அண்மை இன்றித் தவிப்பது தான் எங்கள் கவலை.

இப்போதும் கூட போய் வருகிறேன் புதுகையே என்று சொல்லி இருக்கிறீர்கள் ஆனால் 15 நாளில் நீங்கள் மீண்டும் பணிக்குத் திரும்பும் போது...எங்களை பிணிக்குள் தள்ளிவிடுகிறீர்கள்..

இம்முறை நீங்கள் போனதும் பாப்பா பள்ளிக்குச் செல்லவில்லை. அவளால் முடியவில்லை. மனநலம் காரணமாக உடல்நலம் கெட்டது. விடுப்பு என்பதே இத்தனை வருட கல்விகாலங்களில் எடுத்தறியாத நானும் ஒரு நாள் விடுப்பு எடுத்தேன்..காரணம் உடல்நலத்தைக் கெடுத்த மனநலம்..எனக்கே புரிந்தது..சில சமயங்களில் சிலவற்றை நாம் தவிர்க்க முடிவதில்லை. நாம் அதிக புத்திசாலிகளாக இருந்தாலும் அதே தான் நடந்தது.

பிள்ளைகள் எங்களை விட நீங்கள் செய்யும் குறும்புகள், தண்ணீர் பிடித்து விளையாடுவதிலிருந்து, அனைத்தையும் ரசிக்கிறேன் அம்மா...இன்னும் விளையாட்டுத் தனத்தை விடாத அம்மா...இப்போது நான் கேட்பது விளையாட்டில்லை...

பாப்பாவிற்கு காலை நான்கு மணிக்கு நான் கல்லூரி கிளம்பும் முன் தலை சீவி விடுகிறேன்..அவளோ மாலை நான் வருவதற்குள் சமைத்து பாத்திரம் தேய்த்து வைக்கிறாள்..நீங்கள் வந்தாலும் செய்கிறோம் அம்மா..வாருங்கள்..உங்கள் அண்மை மட்டுமே போதும்..நேற்றெல்லாம் உங்கள் தலையணையில் உங்கள் நைட்டியை மாட்டி பாப்பா அதனை பக்கத்தில் போட்டுப் படுத்த போதும், நான் உங்கள் புடவையை தரையில் விரித்துப் படுத்த போதும் உணர்ந்தோம் உங்கள் மடியில் படுப்பதாகவே..ஆனால் அதுவே நிரந்தரம் என்றால்.....????

பொருளாதாரத்தால் நாம் இப்போது பொசுங்கிப் போன நிலையிலும் நான் அழைக்கிறேன் என்றால்...

என் பிரியத்திற்குரிய அம்மா..உங்கள் படிப்புக்கும் திறமைக்கும் இங்கும் வேலைகள் நிறையக் கிடைக்கும். அரசு வேலை..நிரந்தரம், பணம் ,பொருளாதாரம், சொந்த ஊர் என்று வசனம் மட்டும் சொல்லி விடாதீர்கள் அம்மா...

கலங்கிய கண்களுடனும்...கனத்த இதயத்துடனும்

உங்கள் தலை மகள்...சக்தி..

( பின் குறிப்பு...எப்போதும் சிரிப்பேன் அம்மா...நான் சிரிக்க வில்லை எனில் உங்களிடமிருந்து நான் இதனைக் கூட கற்றுக் கொள்ளவில்லை என்றே ஆகும்..எனவே சிரிப்பேன்..சிரிப்பேன்...ஒரு நீண்ட நெடிய பெருமூச்சுடன்)))Saturday, 12 December 2015

வெட்கித் தலை குனிகிறேன்...பெருமையுடன் கர்வமாய் நிமிர்கிறேன்

வெட்கித் தலை குனிகிறேன்..பெருமையுடன் கர்வமாய் நிமிர்கிறேன் என்ற தலைப்பைப் படித்ததும் உங்களுக்கு சத்தியமாய் தலை சுற்றியிருக்கும். அல்லது என்னை பைத்தியம் என்று நினைத்திருப்பீர்கள்...கேளுங்கள்

வெட்கித் தலை குனிகிறேன்
******************************

நம் நாட்டில் தான் இருந்தது நாளந்தா பல்கலைக்கழகம்..இங்கே வானியல், இயற்பியல், வேதியல், சமூகவியல், உளவியல்,விலங்கியல், என்று அனைத்து வகையான இயல்கள் என்று மொத்தம் 118 வகைப் பாடங்கள் இருந்ததாகவும் அன்றைய நாளில் நாம் அனைத்து வகையிலும் சிறந்த மனிதர்களாக வாழ்ந்ததாகவும் பிற்காலம் வந்த பல்வேறு படையெடுப்புகளால் அவைகள் அழிந்ததாகவும் படிக்கிறேன்..அப்படி பட்ட முன்னோருக்கு பிறந்தவர்கள் தான் நாமா?

சிபி என்று சக்கரவர்த்தி இருந்தான். இவன் புறாவிற்கு தன் தொடைக்கறியைத்தந்தானாம்.
 இப்படியாக, பாரி, காரி, அரிச்சந்திரன், ராமன், என்றும் பல்வேறு அகிம்சைக் கதைகள் அன்புகதைகள், உண்மை பேசும் கதைகள்

எல்லாம் படித்து வளர்ந்தவள் பேசுகிறேன் , கேளுங்கள்,

வரும் முன் காப்போம் என்பது தானே நமது கோட்பாடு..ஆனால் இவ்வளவு இடர்கள் வந்த பின்னே அவர்கள் உதவினார்கள், இவர்கள் கொடுத்தார்கள் என்று பேசியும் செய்தும் வருவதில் எவ்வளவு இழப்புகள்??எவ்வளவு போராட்டங்கள்??எவ்வளவு தடுமாற்றங்கள்? எவ்வளவு உளவியல் போராட்டங்கள்?

ஹாங்காங் சூறாவளியால் ஒவ்வொரு ஆண்டும் பாதிக்கப்படும். அங்கே ஒரு மணிநேரத்திற்கு நூறு கிலோமீட்டர் வேகத்துடன் காற்று வீசும் ஆனால் அங்கேயுள்ள கட்டிடங்கள் அதனைத் தாங்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளன.

பூமியில் மனிதன் வாழத் தொடங்கியது முதல் பல்வேறு இழிவுகள், அழிவுகள், இழப்புகள் சந்தித்துள்ளது ஆனால், இப்போது சந்தித்திருக்கும் அழிவுகள்???

அன்றைய தினத்தின் இரவில் விடிய விடிய கொட்டும் மழையில் மொட்டை மாடியில்...நின்ற எல்லோருக்கும் தெரியும் உயிரின் வலியும் வேதனையும்..

மாடியிலிருந்தும் வழிந்த தண்ணீர், பூமியிலிருந்து இரண்டாவது மாடி வரை எட்டிய நீர்...

பூட்டிய வீடுகளுக்குள் தண்ணீரில் மிதந்த பிணங்கள்.

தனியார் மாணவர் விடுதியில் மிதந்த மாணவர்கள்...இது எப்படி நடந்தது?

நகரத்தின் நீர் நிலைகளை அழித்தல், மோசமான கட்டமைப்புக்கும் அனுமதி அளித்தல், என்று நகரத்தின் திட்டமிடலில் அடிப்படையில் இருந்து பிழை...பிழை...சொன்னது மழை

அதுதான் தவறென்றால் ஒரே நேரத்தில் செம்பரம்பாக்கம் ஏரியில் 29,000 கன அடி தண்ணீரும் அடையாற்றில் 90,000 முதல் 1,00,000 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது..அவர்களுக்கே தெரியவில்லை என்று மழுப்பப்பட்டாலும் போன உயிர் எப்ப்டி திரும்பி வரும்/

மூன்றாம் வகுப்பு படிக்கும் பையன் தன் தந்தை தாய் என்று எல்லோரையும் இழந்து வீதியில் நிற்கிறான். இப்போது அவனுக்கு எது வீடு என்று அடையாளம் காட்டக் கூடத் தெரியவில்லை. நாகரீகத்தையும் பழகும் முறையையும் பார்த்தால் படித்த வேலை பார்க்கும் பெற்றோருக்கு பிறந்தவனாய்த் தெரிந்தான்.

எச்சரிக்கை விடுக்கும் முன்பே மின்சாரம் இல்லை. எனவே தொலைக்காட்சி  செல்பேசி என்ற எந்தத் தகவல் தொடர்பும் இல்லை. மேல் கரையில் அறிவித்துவிட்டு கீழ்கரையில் அறிவிக்கும் முன்பு தண்ணீர் புகுந்தது,

உண்மையில் உயிர் பிழைத்தவர்கள் எல்லாம் மறு பிறப்பு என்று தான் சொல்ல வேண்டும்

பாலத்திற்கு அடியில் எத்தனை குழந்தைகளின் தலைகள்,? யாருமே கேட்க வரவில்லை என்றால் அவர்கள் சொந்தக்காரர்களும் போய்விட்டார்கள் என்று தானெ பொருள்??

செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு 3645 மில்லியன் கன அடி 228 மட்டுமே நீர் இருப்பு ஆனால் அது ஒரே நாளில் 791 ஆக உயர்ந்தும் என்ன தான் செய்தார்கள்?

ஒரு அரசு நதி நீரை வீட்டு மனைகளாக்கி கொடுத்து இருக்கிரது. அடுத்து வந்த அரசு வீடு கட்டிக் கொடுத்திருக்கிறது. பிறகு தொலைக்காட்சி, மிக்ஸி, கிரைண்டர்,

சத்தியமாய் உங்கள் அரசியல்வாதிகளை, நான் குறை சொல்ல வில்லை. கட்சிகளையும் குறை சொல்ல வில்லை..செய்யாததைச் செய்ததாகவும், பாராட்டிக் கொண்டே இருங்கள் அவ்வளவு பக்தியையும் அவர்களிடம் காட்டிக் கொள்ளுங்கள்..

யார் யாரோ பிறந்து சிறந்து வளர்ந்த பூமியில் இத்தனை அதிகாரிகள், இத்தனை அலுவலர்கள் எல்லாம் படித்தவர்கள் தானே? என்ன செய்தீர்கள்? இந்த இடத்தில் வீட்டு மனைப் பட்டா வழங்கக்கூடாது என்றோ இத்தனை மாடி கட்டப்படக்கூடாது என்றோ ஏன் சொல்ல வில்லை? கேட்கவில்லை? செயல் படவில்லை?

எங்கிருக்கிறது உங்கள் சிக்கல்?எந்த சட்டங்களைப் பின்பற்றினார்கள்?ஒருவருமே ஒரு வார்த்தையும் கேட்கத் தோன்றவில்லையா? துணிவில்லையா?

இப்போது உங்களை வணங்கி உங்கள் பாதையில் நடப்பதா? மோதி மிதித்து விடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்ந்து விடு பாப்பா என்று உமிழ்வதா? அல்லது வெட்கித் தலை குனிவதா?

உங்கள் முன்னோர்கள் என்று சொல்ல ஒரு நெடிய கதை இருக்கிறது. ஆனால் எங்களுக்கு நீங்களா முன்னோடிகள்? உங்களையா நான் எனக்குப் பின்னான தலைமுறைகளுக்குச் சொல்லிக் கொடுப்பேன்?

அதோடு உதவி செய்ய வந்த பலர் தங்கள் முகநூலில் போட்டுக் கொள்வதற்கு புகைப்படம் எடுத்துக் கொண்டீர்களே? அடடா? ஆவணம் முக்கியம் அய்யா.

சோகமாய் கிடக்கும் பெண்கள் , பரிதவிக்கும் பெண்கள் என்ற தலைப்பில் நீங்கள் போட்டுக் கொண்ட புகைப்படங்கள் அடடா..உங்களுக்கு ஆஸ்கர் அல்லது அதனை விட உயரிய விருதுகள் தரும் தான்..

********************************************

பெருமையுடன் கர்வமாய் நிமிர்ந்தேன்
****************************

ஏதேதோ ஊர்களில் இருந்து வந்தார்கள் துப்புரவுத் தொழிலாளர்கள், சாலைகளை சரி செய்ய.ஒரு தாசில் தார் ரோடு கூட்டுகிறார்.

ஒரு இளைஞன் , எந்த வழிசல்களும் இல்லாமல் பல பெண்களுக்கு உதவுகிறான்.

இஸ்லாமியர், ஜெயின், கிறித்தவர் என்று ஒருவருக்கு ஒருவர் பல உதவிகள்..

வீட்டில் ஒரு பொருளும் இல்லாமல் மழை அடித்துப் போனது என்ற போது மாற்றுக்குத் துணியில்லாமல் ஈர உடையோடு இருந்த போது, புதிய ஆடைகள் வழங்கிய உள்ளங்கள்,

மாவட்டம் எல்லாம் பார்க்காமல் வேறு வேறு மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள்

குறிப்பார் எங்கே மின் கம்பங்கள் சாய்ந்து அதன் ஒயர்களெல்லாம் அறுந்து தொங்கிய போதும் கவனமாய்  பிரித்து மீண்டும் மின்சாரம் வர உதவிய மின்சாரத் துறை ஊழியர்கள்

திரைப்படங்களில் ஒரு தோசைக்குக் கூட தன் கம்பீரத்தை விற்கும் காவலர்கள் செய்த சேவைகள்..

எல்லோருக்கும் நீங்களும் சொல்லுங்கள் உங்களின் நெஞ்சத்தின் ஈரத்தால் ஒரு வீர வணக்கம்..

அவர்களுக்காக பெருமைப் படுகிறேன்..

அதோடு இவ்வளவு பேரழிவு நடந்து என் தந்தையோடு தொடர்பு கொள்ள இயலாமல் தவித்த பொழுதுகள் தந்த ரணம், அப்பா நாங்கள் உயிரோடு தான் இருக்கிறோம் என்று நாங்கள் மௌனமாக அலறிய பொழுதுகள்

யாரோ ஒரு அம்மாவுக்கு தன் பிள்ளைகளைக் காணோம்..பிள்ளைகளுக்குத் தன் அம்மாவை அப்பாவைக் காணோம்..

எல்லாம் பொருட்களோடு பொருட்களாய் போய் செர்ந்தார்கள் என்று அறியும் வயதா இது?

இன்னும் நான் பெருமை கொள்ள இருக்கிறது என் அன்பின் சுடர்களே

அது

இவ்வளவு சூழலில் இருக்கிறோம் என்ற பின்னும் எங்கள் அப்பா கடலூருக்குச் சென்று அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவியது,

ஒவ்வொரு வருடமும் தன் பிறந்த நாள் மட்டும் அல்லாது தனக்கு அம்மா கொடுக்கும் காசெல்லாம் சேர்த்து வைத்து எந்த புகைப்படமும் எடுத்துக் கொள்ளாமல் முகநூலிலும் வெளியிடாமல்ஏழைச் சிறுவர்களுக்கு கல்விக்கு  உதவும் என் தங்கை..

நாங்கள் இரண்டு நாட்களாய் பட்டினி கிடந்த போதும், உதவிப் பொருட்கள் வந்து தந்த போதும், இல்லையம்மா..இது நமக்கானது இல்லை, நாம் வாங்கக் கூடாது, ஏனெனில் நான் வேலை பார்க்கிறேன்..அதற்கு மாதாமாதம் ஊதியம் வருகிறது அதில் தான் நாம் சாப்பிட வேண்டும் இது இல்லாதவர்களுக்காக : ;நமக்கு வேண்டாம் என்று மறுதலித்த என் அம்மா..

( இரண்டு நாட்களாய் மீட்புப் பணிக்கு மருத்துவமனைப் பணிகளுக்கும் உதவிகள் செய்ய சென்று விட்டார்)

மின் இணைப்பு வந்த பிறகு எங்களை அன்போடு விசாரித்த நல் உள்ளங்கள்..அடடா...நான் ஒரு தேவ உலகத்தில் இருக்கிறேன் என்று சொல்ல வைத்த பொழுதுகள்..

இன்னும் திடம் கொண்டிருக்கிறேன்..

இனியும் நான் எப்படிப் பொறுப்பது??

என் வேலை என்ன என்று தெரிந்து விட்டது. படித்து அதன் மூலம் வேலை பெற்று என் வருமானத்தில் பாதியை மட்டுமே என் குடும்ப செலவிற்கு மீதி 50 சத்வீதம் படிக்கும் குழந்தைகளுக்கு. மருத்துவத்திற்கு, இல்லாதோருக்கு என்று செலவிடப் போகிறேன். நிச்சயம் என் குடும்பம் அதை ஏற்கும். போன பொழுகள் போகட்டும் இனி வரும் காலமெல்லாம் என்னால் முடிந்த அளவுக்கு பணி புரியப் போகிறேன்.

அந்த நாளில் என் சமூகமே தலை நிமிரும்...நாங்கள் சூரியத் தோரணங்கள் தான்..