Monday, 16 November 2015

தண்ணீரில் தத்தளித்து

தீபாவளி முதலே மழை மிகத் தீவிரமாக பெய்யத்தொடங்கிவிட்டது. வெள்ளி வரைக்கும் கல்லூரி இருந்தது. சனிக் கிழமை மழையின் தீவிரம் அதிகமானதால் விடுமுறை என்று அறிவித்து விட்டார்கள். என் போன்றவர்கள் பெருத்த கவலையில் ஆழ்ந்து விட்டோம். அண்ணா பல்கலைக் கழகக் கலந்தாய்வு மிகவும் தாமதமாக நடந்ததாலும் கடைசி வரை எங்கள் கல்லூரியில் மாணவர்கள் சேர்ந்து கொண்டே இருந்ததாலும் செப்டம்பர் மாதம் தான் பாடங்கள் முழுமையாக ஆரம்பிக்கப்பட்டன.  இரண்டு மதிப்பீட்டுத் தேர்வு முடிந்திருந்த நிலையில் மூன்றாவது நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் பல்கலைக்கழகத் தேர்வு...இந்தத் தேர்வை நான் மிகவும் ஆசையாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஆனால் மழையின் கோரத்தாண்டவம்...

நாங்கள் வசிக்கும் பகுதியானவேளச்சேரி....ஏரி...எங்கள் வீடு எல்லாம் ஏரியைச் சேர்ந்தது தான் என்று நான் கேள்விப்பட்ட போது அதிர்ச்சியானேன்.

பால் , காய்கறி என்று எந்த உணவுப் பொருளும் கிடைக்க வில்லை.

ஆனால் அருகாமையில் இருந்த கடைகளில் அன்று பாலின் விலை 20 ரூபாய் ஆவின் நைஸ் விலை 40, உருளைக்கிழங்கு ரூபாய் 58, முட்டைக் கோஸ் ஒன்றின் விலை 55, கேரட் 78, பீட்ரூட்80, தக்காளி 140, கீரை சாதாரணமாக ரூபாய் 15 அல்லது 10க்குக் கிடைக்கும் அன்று 40. கேட்கவே உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும்

மழையில் சாலை வழியாக பயணமான வண்டிகளில் சில சாலை பள்ளங்களில் தடுமாறி விழுந்தனர். அவர்களைத் தூக்கி விட்டு வண்டியை எடுத்துத் தந்து 300 முதல் 500 வரை பணம் பெற்றனர்.

அரசியல் வாதிகள் தான் மக்களை ஏமாற்றுவார்கள் என்ற என்எண்ணத்தில் தீ இல்லை. எரிமலையே வெடித்தது.அன்று தான். ஆளாளுக்கு என்னென்ன வழிகளில் பணம் சம்பாதிக்க முடியுமோ அந்த வழிகளில் பணம் சம்பாதித்தனர்.

இன்னும் நான் சொன்னால், இப்படியெல்லாமா நடந்தது என்று நீங்கள் உங்கள் மூக்கில் மட்டுமல்ல , பக்கத்து வீட்டுக்காரர் மூக்கின் மேலும் விரல் வைப்பீர்கள்

மூன்று நாட்களாய் மின்சாரம் இல்லை. எனவே எங்கள் செல்பேசி இணைப்புகளில் இருந்த சார்ஜ் முற்றிலுமாகக் கரைந்தது. பவர் பேங்க் என்று சொல்லப்படும் சார்ஜர்களில் சார்ஜ் ஏற்றி, அதனை 50க்கும் 100க்கும் விற்றனர். மக்களும் வெளியூர்களில் வசிக்கும் தங்கள் குடும்பத்தாரோடு பேச அதனை விலைக் கொடுத்து வாங்கி உபயோகித்தனர்.

உதவி என்று இருக்கும் செயல்கள் அனைத்தும் அன்று வியாபாரமாக்கப்பட்டது கண்டு எனக்குத் தலை சுற்றியது.

தரை தளத்தில் இருந்தோர் ஒரு சிலர் காலி பண்ணி பாதுகாப்பு இடங்களுக்குச் சென்றனர். அப்படி பாதுகாப்பு கருதி வேறு வீட்டுக்குச் சென்றவர்களின்  வீடு பக்கத்தில் இருந்தவர்கள், தங்கள் வீட்டிலிருந்து தண்ணியை அடுத்தவர்கள் சுற்றுச் சுவர்களுக்குள் கொட்டினர். ( இதை பக்கத்து வீடுகளில் வேடிக்கை பார்த்துக் கொண்டு தான் இருந்தார்கள்.)

வழக்கம் போல் மீன் பிடிக்கும் சிறுவன் மனம் கொண்ட பெரியவர்கள் தங்கள் குழம்புகள் கொதிக்க வைக்க மீன்பிடித்து விளையாடினர்.( கொண்டாடினர்.)

யாரும் யாருக்கும் அடிப்படையில் மனித நேயத்தோடு நடந்து கொள்ள வில்லை என்பதே என் கணிப்பாக இருந்தது.

பெரிய மலைப்பாகவும் வியப்பாகவும் இருந்தது. எல்லாவற்றையும் வியாபாரமாகப் பார்க்கக் கற்றுக் கொடுத்தவர்கள் யார்? கற்றவர்கள் யார்? எனக்கு அழுகை வந்தது. என் மக்கள் இப்படி இருப்பது என்னால் தாங்க இயலவில்லை. இந்தப் பதினேழு வயதில் என்னால் என்ன செய்ய இயலும் என்ற இயலாமையில் தவித்தேன். இது தண்ணீரில் தத்தளித்த மக்களை விட என் மனது தத்தளித்த சோகம் தான் அதிகம்..

அரசு தான் இந்தப் பகுதியை நிலமாக்கி விற்றுள்ளது. பின்நாளில் கரையோரம் மிகவும் குறுகலாக்கப்பட்டுள்ளது குடிசை போட்ட மக்களால். அவர்களும் பட்டா போட்ட பிறகு விற்று இருக்கின்றனர்.


( இதை எழுதிக் கொண்டிருக்கும் இந்நேரம் மோட்டார் வைத்து தண்ணீர் எடுத்துக் கொண்டுள்ளார்கள்..மின்சாரம் அரை மணிநேரம் மட்டும் தரப்படும் என்று சொல்லி, சரியான பின் முழுவதுமாக தரப்படும் என்று சொல்லிச் சென்றுள்ளனர்..ஆனால் பால் விலை 30 ரூபாயாகக் குறைந்தது. காய்கறி விலை அதே தான்...)

எல்லோரும் தப்பு பண்ணா அரசாங்கத்துக் கிட்ட சொல்லணும்...அது சரி..

அரசாங்கமே தப்பு பண்ணா??????!!!!!!

( நான் போட்டுள்ள ஆச்சர்யக் குறியும் கேள்விக்குறியும் கவிஞர்கள் தங்கள் கவிதைகளில் போடும் ஆச்சர்யக்குறி அல்ல)


யார் மாற வேண்டும்?
*************************************************************************
Image result for சென்னை வெள்ளம்Image result for சென்னை வெள்ளம்Image result for சென்னை வெள்ளம்Image result for சென்னை வெள்ளம்

Friday, 13 November 2015

கடவுளைக் கண்டேன்

1. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்..என்ற வள்ளுவரின் குறள் உண்மையாக வேண்டும். வங்கியில் கிரடிட் ,டெபிட் கார்டுகள் இவர்களுக்கு முதன்மையாக வழங்கப்பட்டு, நாட்டின் முதல் தரத்தில் இவர்கள் வைக்கப் பட வேண்டும்.இவர்களுக்கே வங்கிக்கடன்,போக்குவரத்து இலவசம் என்று அனைத்து வசதிகளும் செய்து தரப்பட வேண்டும்...( போலி விவசாயிகள் இருந்தால் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் 20வருடம் சிறை தண்டனை)2. முதல் வகுப்பிலிருந்தே சட்டத்தின் அனைத்து நுணுக்கங்களும் கற்பிக்கப்பட வேண்டும்.

3. மாநிலத்தின் மொழிகள் கட்டாயமாக கற்றிருத்தல் வேண்டும்.

4. குறிப்பிட்ட இலக்குக்கு மேல் சொத்து உள்ளவர்களின் உபரி வருமானத்தை அரசு எடுத்துக் கொள்ள வேண்டும்.( ஒருவர் இத்தனை கோடி தான் சொத்து வைத்து இருக்க வேண்டும் என்று நிர்ணயம் செய்து விட வேண்டும்.)

5. அனைத்துப் பணிகளும் அரசுடமையாக்கப் பட வேண்டும். (அமைச்சர், ஆட்சியர்,அலுவலர் என்று எந்த பாகுபடும் இல்லாமல் அவரவர் வேலைக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும்)

6. பெண்களுக்கு எதிரான வன்முறை செய்பவர்கள் யாராக இருந்தாலும் நாடு கடத்தப்பட்டு விடுமுறை அற்ற வேலை பார்க்க வைக்க வேண்டும்.

7. நமது நாட்டு உணவுகளின் மேன்மைகளை எடுத்துரைத்து, நம் மக்கள் நம் உணவுகளை மட்டும் உண்ண வைக்க வேண்டும் ( உதாரணம் பாதாம் பருப்பு விடுத்து கடலை..ஓட்ஸ் விடுத்து கேழ்வரகு..கோக்,பெப்ஸிக்கு பதில் இளநீர்,பதநீர்)

8. அறிவியல், நிலவியல், கணினி, மருத்துவம், விஞ்ஞானம் என்று அனைத்துத் துறைகளும் 2020 க்குள் அதன் உச்ச நிலையை அடைந்திருக்க வேண்டும்.9.கல்லூரி மாணவர் என்ற பருவத்திற்கு வந்த பிறகு வாரத்தின் இறுதியில் நாட்டுக்கு என்ன வேலை செய்ய முடியுமோ அதனை செய்து தர வேண்டும்...(இதனை கட்டாயப் பணியாக்க வேண்டும்)

10 இந்திய ரூபாயின் ஒரு ரூபாய்க்கு 100 அமெரிக்க டாலர்கள் என்ற அளவில் இந்தியாவின் ரூபாய் மதிப்பு உயரணும்

********************************************************************************

கனவு காணுங்கள் என்றார்...எங்கள் விடிவெள்ளி டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம்...அதைக் கொஞ்சம் பட்டி டிங்கரிங் வேலை பார்த்தால் கடவுளைக் கண்டேன்...

நானே நினைக்க வில்லை. நல்ல திட்டங்கள் என் மனதில் எழுந்து கொண்டே இருந்தது..நன்றி என்னை இணைத்த அப்பாவிற்கு( வாய்ப்பு வழங்கிய கில்லர்ஜி அங்கிளுக்கும்)

*********************************************************

1.http://vishcornelius.blogspot.com/2015/11/blog-post_12.html

2.http://www.gunathamizh.com/2015/11/05112015.html

3.http://bharathinagendra.blogspot.in/

4.http://sooryanilaa.blogspot.in/

5.http://naachiyaar.blogspot.in/

6.http://kavipriyanletters.blogspot.com/

7.http://isaikarukkal.blogspot.in/

8.http://sunshinesignatures.blogspot.in/

9.http://piriyasaki.blogspot.in/

10.http://chollukireen.com/

*********************************************************************************

 மழைக்கென விடுமுறை விட்டிருந்தாலும் பாடங்கள் நிறைய இருந்ததால் இவ்வளவு நேரம் ஆகிவிட்டது..( மன்னிக்க கில்லர்ஜி அங்கிள்)

Tuesday, 3 November 2015

அப்பவே சொன்னாங்க...

வணக்கம்ங்க..

எல்லா சினிமாவுலயும் காலேஜ்னா சும்மா ஒரே ஒரு நோட்டு மட்டும் தூக்கிப்போறது, அடுத்த பெண்களைப் பாத்து கமெண்ட் பண்றது. எப்பப் பார்த்தாலும் ஒரு கட்டை சுவத்துல உக்காந்துகிட்டு பேசி சிரிக்கிறது, கிளாஸ் கட் அடிக்கிரதுன்னு காண்பிப்பாங்க.

பத்தாம் வகுப்பு படிக்கிறப்ப, சரி இன்னும் ரெண்டு வருஷம் தானேனு நினைச்சு நானும் படிச்சு, நல்ல மார்க்( அப்படி தான் நம்புறேன்...) எடுத்து நல்ல பிள்ளைனும் பேர் வாங்கி வெளில வந்துட்டேன்.

நான் ஐ.ஏ.எஸ். படிக்கணும்னு சொன்னேன். அப்படின்னா, ஏதாவது இளங்கலை பட்டம் வாங்கினா போதும் பி.பி.ஏ. அல்லது பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படினு அம்மா சொன்னாங்க... நானோ நீண்ட காலமா நாம பி.இ. கம்ப்பூட்டர் சயின்ஸ் தான் படிக்கணும்னு நினைச்சுருந்தேன்...

ஒரு வேளை இதைப் படிக்க வைக்க அம்மா அப்பாட்ட காசு இல்லையோனு பயந்து நான் சொன்னேன். இல்லைடா இது படி எளிமையா இருக்கும்னு சொல்லவும், நான் விடாப் பிடியா, சென்னைல தான் படிப்பேன். அதுவும் பி.இ. கம்ப்ய்ய்ட்டர் சயின்ஸ் தான் படிப்பேன்னும் அடம் பிடிச்சு சென்னை கூட்டி வந்துட்டேன்.

நடு நடுவுல ஏன் பொம்பளைப் பிள்ளைகளப் படிக்க வைக்க மாட்டீங்களா? எங்களுக்கு மட்டும் என்ன சாதாரணப் படிப்பா? நாங்க நினைச்ச படிப்ப படிக்ககூடாதானு அப்போப்ப வசன்ம் எல்லாம் பேசினேன்.(நடு நடுவில மானே தேனே பொன்மானே எல்லாம் போட்டுக்குங்க)

என் சார்பா பேச எங்க பிரின்ஸிபால் மிஸ்ஸையெ தயார் பண்ணேன். பாக்குறப்பல்லாம் சோகமா முகத்தை வச்சுகிட்டு எங்கம்மா என்னை ஆர்ட்ஸ் படினு சொல்லிட்டாங்கன்னு வேற போட்டுக் கொடுத்தேன். அம்மாவோட தோழியான பிரின்ஸியும் ஏங்க நீங்க படிச்சவங்க, இவ்ளோ நல்லாப் படிக்கிர பிள்ளைய இப்படி பண்ணலாமா? உங்களுக்குப் பணத்தட்டுப்பாடுன்னா, நான் ஏதாவது, ரோட்டரி கிளப் போல ஏதாவது அரேன்ஜ் பண்ணவான்னு கேட்க, ஓ இல்லை. அவள் என்ன வேண்டுமானாலும் படிக்கட்டும்னு சொல்லி அம்மா உடனே சென்னையில் இருக்கும் தன் நட்பு வட்டங்களுக்கு தொடர்பு கொண்டு நான் இந்த கல்லூரில சேர்ந்துட்டேன். இது தான் நான் காலேஜ் சேர்ந்த கதை.

இவ்ளோ நாள் ராப்பகலா தூக்கம் முழிச்சுப் படிச்சாச்சு. இனி லைப்ரரி போய் ஜாலியா படிக்கலாம், நினைச்சா சினிமா போகலாம். அரட்டை அடிக்கலாம் என்று பல வாறு என் எண்ண ஓட்டங்கள் ஓட்டப் பந்தய வீரரை விட வேகமா ஓடிச்சு.

இதற்கிடையில் பல காலேஜ் பசங்க படிக்கிற படங்கள் எல்லாத்தையும் கதை கேட்டு சில படங்கள் பாத்து, ராகிங் இருக்கும், அது இது என்று பயந்ததோடு எதற்கும் கலங்காதிரு மனமே நு என்னை நானே தேத் தி தைரிய லட்சுமி யா ஆக்கி வைச்சிருந்தேன்.

காலேஜ் போன முதல் எங்களுக்கு நல்ல விருந்து சாப்பாடு போட்டாங்க. பல பேர் வந்து பேசினாங்க. அந்த காலேஜ் பத்தி நிஜமான கதைகள் கொஞ்சமும் நல்லவிதமாக சொல்லப்பட்ட ஆனால் நம்பவே இயலாத தெரிந்தவைகளுமாக எங்களுக்குச் சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.

மறு நாள்லேர்ந்து ஜாலி நினைச்சுப் போன முதல் வகுப்பிலேயே பாடம் நடத்த ஆரம்பிச்சுட்டாங்க...அய்யோ????? இதென்ன அநியாயம்...அதோடு மட்டும் இல்லை. சீனியர்களுக்கும் வகுப்பு நடந்தது. யாரும் கட்டை சுவத்துல உட்காரலை. ஆனா பல கட்டை சுவர்கள் காலியாகவே இருந்தது. இருந்தாலும் பல  கட்டை சுவர்கள் , மற்றும் காம்பவுண்டு சுவர்கள் பற்றி நான் விவரம் கேட்க, ஏய் நீ கம்ப்யூட்டர் சயின்ஸ் தானே எடுத்த? பிறகு ஏன் சிவில் பத்தி கவலைப் படுறனு எல்லாரும் என்னையத் தான் ஒரு மாதிரி கேலியாப் பாத்தாங்க.

ராகிங் கூட இல்லையா...இது எனக்கு அதிர்ச்சி...அக்காக்கள்,,,அண்ணாக்கள் யாரும் உங்களை பேர் கேட்டாக்கூட நீங்கள் எங்களிடம் சொல்லலாம். உடனே அவர்களை சஸ்பெண்ட் பண்ணிடுவோம்னு வேற சொல்லிட்டாங்க...அந்த அக்காக்களும் அண்ணாக்களும் எங்களிடம் தங்கள் குடும்ப உறுப்பினரைப் போல நினைத்து பழகுறது அதைவிட பெரிய அதிர்ச்சியா இருந்துச்சு..

அதோட பெரிய அதிர்ச்சி தினமும் வகுப்பு ஒரு பிரிவேளை கூட இடைவேளை விடாமல் நடந்தது. ஒரு ஆசிரியர் போய் மற்ற ஆசிரியர் வருவதற்குள் ஒரு தண்ணி கூட குடிக்க முடியலை. நான் மாணவர்கள் யாரும் தம் அடிக்க போவார்கள் என்றே நினைத்திருந்தேன். ஆனால் அதுவும் நடக்கவில்லை.

பெரிய அதிர்ச்சி என்னான்னா, போன 20 நாள்ல தேர்வு வச்சுட்டாங்க. அது முடிஞ்சு சும்மா இருக்க முடியலை, அசைன்மெண்ட், பிராஜெக்ட், அஸெஸ்மெண்ட். அப்படினு இன்னும் உட்காரக் கூட முடியலை. பிளஸ்டூ அப்புறம் ரொம்ப ஜாலியா இருக்கும் எப்ப பார்த்தாலும் கதை புத்தகமும் வேறு வேறு புத்தகங்கள் படிக்கலாம் நு நினைச்சிருந்த என்னை இந்த கல்லூரி வாழ்க்கை அப்படியே மாத்தி போட்டுடுச்சு.

(எவ்வளவு அப்பாவியா வாழ்ந்திருக்கேன் ....)

சேர்ந்த முதல் வருஷம் முதல் அஸஸ்மெண்ட் லேயே முதல் இடம் மகிழ்ச்சியா இருக்கு....நான் நல்லாப் படிப்பேன்...ஆனால் ஏங்க பின்ன எல்லாப்படத்துலேயும் காலேஜ்னா வேலையில்லாதவங்க மாதிரியே காட்டுறாங்க...என்னைத் துளைத்தெடுக்கும் கேள்வி இது...உங்களுக்குத் தெரிந்தால் பதில் சொல்லுங்கள்...