Tuesday, 3 November 2015

அப்பவே சொன்னாங்க...

வணக்கம்ங்க..

எல்லா சினிமாவுலயும் காலேஜ்னா சும்மா ஒரே ஒரு நோட்டு மட்டும் தூக்கிப்போறது, அடுத்த பெண்களைப் பாத்து கமெண்ட் பண்றது. எப்பப் பார்த்தாலும் ஒரு கட்டை சுவத்துல உக்காந்துகிட்டு பேசி சிரிக்கிறது, கிளாஸ் கட் அடிக்கிரதுன்னு காண்பிப்பாங்க.

பத்தாம் வகுப்பு படிக்கிறப்ப, சரி இன்னும் ரெண்டு வருஷம் தானேனு நினைச்சு நானும் படிச்சு, நல்ல மார்க்( அப்படி தான் நம்புறேன்...) எடுத்து நல்ல பிள்ளைனும் பேர் வாங்கி வெளில வந்துட்டேன்.

நான் ஐ.ஏ.எஸ். படிக்கணும்னு சொன்னேன். அப்படின்னா, ஏதாவது இளங்கலை பட்டம் வாங்கினா போதும் பி.பி.ஏ. அல்லது பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படினு அம்மா சொன்னாங்க... நானோ நீண்ட காலமா நாம பி.இ. கம்ப்பூட்டர் சயின்ஸ் தான் படிக்கணும்னு நினைச்சுருந்தேன்...

ஒரு வேளை இதைப் படிக்க வைக்க அம்மா அப்பாட்ட காசு இல்லையோனு பயந்து நான் சொன்னேன். இல்லைடா இது படி எளிமையா இருக்கும்னு சொல்லவும், நான் விடாப் பிடியா, சென்னைல தான் படிப்பேன். அதுவும் பி.இ. கம்ப்ய்ய்ட்டர் சயின்ஸ் தான் படிப்பேன்னும் அடம் பிடிச்சு சென்னை கூட்டி வந்துட்டேன்.

நடு நடுவுல ஏன் பொம்பளைப் பிள்ளைகளப் படிக்க வைக்க மாட்டீங்களா? எங்களுக்கு மட்டும் என்ன சாதாரணப் படிப்பா? நாங்க நினைச்ச படிப்ப படிக்ககூடாதானு அப்போப்ப வசன்ம் எல்லாம் பேசினேன்.(நடு நடுவில மானே தேனே பொன்மானே எல்லாம் போட்டுக்குங்க)

என் சார்பா பேச எங்க பிரின்ஸிபால் மிஸ்ஸையெ தயார் பண்ணேன். பாக்குறப்பல்லாம் சோகமா முகத்தை வச்சுகிட்டு எங்கம்மா என்னை ஆர்ட்ஸ் படினு சொல்லிட்டாங்கன்னு வேற போட்டுக் கொடுத்தேன். அம்மாவோட தோழியான பிரின்ஸியும் ஏங்க நீங்க படிச்சவங்க, இவ்ளோ நல்லாப் படிக்கிர பிள்ளைய இப்படி பண்ணலாமா? உங்களுக்குப் பணத்தட்டுப்பாடுன்னா, நான் ஏதாவது, ரோட்டரி கிளப் போல ஏதாவது அரேன்ஜ் பண்ணவான்னு கேட்க, ஓ இல்லை. அவள் என்ன வேண்டுமானாலும் படிக்கட்டும்னு சொல்லி அம்மா உடனே சென்னையில் இருக்கும் தன் நட்பு வட்டங்களுக்கு தொடர்பு கொண்டு நான் இந்த கல்லூரில சேர்ந்துட்டேன். இது தான் நான் காலேஜ் சேர்ந்த கதை.

இவ்ளோ நாள் ராப்பகலா தூக்கம் முழிச்சுப் படிச்சாச்சு. இனி லைப்ரரி போய் ஜாலியா படிக்கலாம், நினைச்சா சினிமா போகலாம். அரட்டை அடிக்கலாம் என்று பல வாறு என் எண்ண ஓட்டங்கள் ஓட்டப் பந்தய வீரரை விட வேகமா ஓடிச்சு.

இதற்கிடையில் பல காலேஜ் பசங்க படிக்கிற படங்கள் எல்லாத்தையும் கதை கேட்டு சில படங்கள் பாத்து, ராகிங் இருக்கும், அது இது என்று பயந்ததோடு எதற்கும் கலங்காதிரு மனமே நு என்னை நானே தேத் தி தைரிய லட்சுமி யா ஆக்கி வைச்சிருந்தேன்.

காலேஜ் போன முதல் எங்களுக்கு நல்ல விருந்து சாப்பாடு போட்டாங்க. பல பேர் வந்து பேசினாங்க. அந்த காலேஜ் பத்தி நிஜமான கதைகள் கொஞ்சமும் நல்லவிதமாக சொல்லப்பட்ட ஆனால் நம்பவே இயலாத தெரிந்தவைகளுமாக எங்களுக்குச் சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.

மறு நாள்லேர்ந்து ஜாலி நினைச்சுப் போன முதல் வகுப்பிலேயே பாடம் நடத்த ஆரம்பிச்சுட்டாங்க...அய்யோ????? இதென்ன அநியாயம்...அதோடு மட்டும் இல்லை. சீனியர்களுக்கும் வகுப்பு நடந்தது. யாரும் கட்டை சுவத்துல உட்காரலை. ஆனா பல கட்டை சுவர்கள் காலியாகவே இருந்தது. இருந்தாலும் பல  கட்டை சுவர்கள் , மற்றும் காம்பவுண்டு சுவர்கள் பற்றி நான் விவரம் கேட்க, ஏய் நீ கம்ப்யூட்டர் சயின்ஸ் தானே எடுத்த? பிறகு ஏன் சிவில் பத்தி கவலைப் படுறனு எல்லாரும் என்னையத் தான் ஒரு மாதிரி கேலியாப் பாத்தாங்க.

ராகிங் கூட இல்லையா...இது எனக்கு அதிர்ச்சி...அக்காக்கள்,,,அண்ணாக்கள் யாரும் உங்களை பேர் கேட்டாக்கூட நீங்கள் எங்களிடம் சொல்லலாம். உடனே அவர்களை சஸ்பெண்ட் பண்ணிடுவோம்னு வேற சொல்லிட்டாங்க...அந்த அக்காக்களும் அண்ணாக்களும் எங்களிடம் தங்கள் குடும்ப உறுப்பினரைப் போல நினைத்து பழகுறது அதைவிட பெரிய அதிர்ச்சியா இருந்துச்சு..

அதோட பெரிய அதிர்ச்சி தினமும் வகுப்பு ஒரு பிரிவேளை கூட இடைவேளை விடாமல் நடந்தது. ஒரு ஆசிரியர் போய் மற்ற ஆசிரியர் வருவதற்குள் ஒரு தண்ணி கூட குடிக்க முடியலை. நான் மாணவர்கள் யாரும் தம் அடிக்க போவார்கள் என்றே நினைத்திருந்தேன். ஆனால் அதுவும் நடக்கவில்லை.

பெரிய அதிர்ச்சி என்னான்னா, போன 20 நாள்ல தேர்வு வச்சுட்டாங்க. அது முடிஞ்சு சும்மா இருக்க முடியலை, அசைன்மெண்ட், பிராஜெக்ட், அஸெஸ்மெண்ட். அப்படினு இன்னும் உட்காரக் கூட முடியலை. பிளஸ்டூ அப்புறம் ரொம்ப ஜாலியா இருக்கும் எப்ப பார்த்தாலும் கதை புத்தகமும் வேறு வேறு புத்தகங்கள் படிக்கலாம் நு நினைச்சிருந்த என்னை இந்த கல்லூரி வாழ்க்கை அப்படியே மாத்தி போட்டுடுச்சு.

(எவ்வளவு அப்பாவியா வாழ்ந்திருக்கேன் ....)

சேர்ந்த முதல் வருஷம் முதல் அஸஸ்மெண்ட் லேயே முதல் இடம் மகிழ்ச்சியா இருக்கு....நான் நல்லாப் படிப்பேன்...ஆனால் ஏங்க பின்ன எல்லாப்படத்துலேயும் காலேஜ்னா வேலையில்லாதவங்க மாதிரியே காட்டுறாங்க...என்னைத் துளைத்தெடுக்கும் கேள்வி இது...உங்களுக்குத் தெரிந்தால் பதில் சொல்லுங்கள்...No comments:

Post a Comment