Tuesday 2 December 2014

டமில் .in...இங்கிலிஷ்

                                  


தலைப்பே புரிய வைத்திருக்கும் இது எதைப் பற்றிய கட்டுரை என்று

இன்றைய மாணவர்கள் தமிழ் மீது அதிக ஆர்வம் காட்டுவதில்லை.  அவர்கள்  சொல்லும் காரணம் படிப்பிற்கு அது எந்த வகையிலும் உதவாது என்பதே.

போதாக்குறைக்கு இந்த தமிழ் வாத்தி எப்படி எழுதினாலும் முழு மதிப்பெண் போட மாட்டார் என்று ஆசிரியரையே குறை சொல்கின்றனர். தமிழ் ஆசிரியர்கள் அவர்கள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இவர்கள் கணக்கில்   “அது” தான்

எதிலுமே தேர்ச்சி பெறாமல், அல்லது எதற்குமே லாயக்கற்றவர்கள் தான் தமிழ் படிக்க வேண்டும் என்பதுவே இவர்களின் எண்ணமாக இருப்பது தான் வேதனையிலும் வேதனை.

சரி படிக்கத்தான் மாட்டேன் என்கின்றார்கள் என்று பார்த்தால் பேச்சும்   “ தத்தக்கா பித்தக்கா”   என்று பேசி தமிழை கொல்கின்றனர்.

உணவு இடைவேளையின் போதும் ஆங்கிலம் கலந்து தான் பேசுகிறார்கள்        ( அதையேனும் முழுமையாய் பேசினால் தேவலை. அதுவும் அரை குறைதான்)

சாதாரண தமிழ் வார்த்தைகளான........கலப்படம், கலந்துரையாடல், இந்த வார்த்தைகள் கூடத் தெரியவில்லை. ஸ்கூல் வெறிச்சோடிக் கிடக்கு என்று சொன்னேன். இந்த வாக்கியம் அவர்களுக்குப் புரியவில்லை. புலவர் மகளே என்று என்னைக் கிண்டல் செய்கிறார்கள்.

தமிழ் அதிகம் தெரிந்து வைத்திருந்தால் அது ஒரு இழுக்கு என்றும் ..அவமானம் என்றும் கருதும் இவர்களை என்ன செய்வது?

சாதாரண சொற்களைக் கூட வித்தியாசமாகக் கேட்கிறார்கள். தமிழ் ஆசிரியர் வகுப்புக்கு வந்தால் அய்யோ ய்யோ தமிழா? என்று சொல்லி பிளேடு என்றும் போர் என்றும் தலையில் கைவைத்துக் கொண்டு அமர்கின்றனர். ஒருவருக்குக் கூட அது நம் தாய்மொழி என்ற பற்றே இல்லை.

இதுவாவது பரவாயில்லை. தமிழ்த் தாய் வாழ்த்து எழுதியது பாரதியார் என்று என்னோடு வாதிடுகிறார்கள். மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை என்றும் பாதி பாடல் தான் அவர்கள் பாடுகிறார்கள் முழுப்பாடலும் கேட்க அழகாகவும் உணர்வுப் பூர்வமாகவும் இருக்கும் என்றால் ஏதோ நான் கதை சொல்வது போல் கேட்கிறார்கள்.

பத்தாம் வகுப்பு தமிழ் ஒன்றுமே அவர்களுக்கு ஞாபகத்தில் இல்லை. இதெல்லாமா நடத்தினார்கள் என்ற பாவனையில் பார்க்கிறார்கள். அதோடு இதனை நான் ஞாபகம் வைத்துள்ளதால் என்னை ஒரு விநோத ஜந்து போலவே பார்க்கிறார்கள்.

பாரதியார், ஒளவையார், கம்பர் தவிர ஒருவரையும் தெரியவில்லை. சுரதா, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, பாரதிதாசன், கண்ணதாசன், அழ.வள்ளியப்பா, முடியரசன், காசிஆனந்தன் , என்று ஒருவரையும் தெரியவில்லை.

இதுவே தெரியவில்லை என்றால் நான் நக்கன்னை, நச்செள்ளை, காக்கைப் பாடினி என்று சொல்லியிருந்தால் என்ன தெரிந்திருக்கும்?

திரையிசைப் பாடல்கள் கேட்கிறீர்களே அதுவும் ஏதேனும் ஒரு கவிஞரால் எழுதப்பட்டுப் பின்பு இசைக்கப் படுவது தானே என்றால் ஏதோ நான் வேற்று கிரகத்தில் இருந்து வந்து இவர்களுக்குச் சொல்வது போலவே தான் பார்க்கப்படுகிறேன்.

சரிதான். ஆங்கில வழிக் கல்வி வேலை தேடுவதற்காக என்றாலும் தமிழை வீட்டில் கேட்க மாட்டார்களாஎன்றால் கல்லூரியிலும் தமிழ் ஒரு வருடம் அல்லது இரு வருடம் தான் வரும் அது மதிப்பெண்ணாக கணக்கெடுப்பது இல்லை எனவே இயற்பியல், வேதியியல் போன்ற பாடங்களில் மட்டும் கவனம் வைத்துப் படித்தால் போதும் என்று வீட்டிலேயே சொல்வார்களாம் ( காசி ஆனந்தன் அய்யா சரியாகத் தான் பாடியிருக்கிறார்....இனிப்பை ஸ்வீட் என்றாய் அறுத்தெறி நாக்கை என்றாரே தமிழே வேண்டாம் என்போரை என்ன சொல்வார்?   )  

இன்னொன்று இவர்களுக்கு இயற்பியல் வேதியியல் என்றால் சிரிப்பு வருது.

தமிழ் மதிப்பெண் தான் அனைத்திற்கும் செல்லுபடியாகும் என்ற சட்டம் இருந்தால் தமிழ் நாட்டில் இருந்து கொண்டே பிரஞ்ச், சமஸ்கிருதம், மலையாளம், தெலுங்கு போன்ற பாடங்களை மொழிப்பாடமாக ஏன் தேர்வு செய்கிறார்கள்.?

இதனை நான் சொன்னால் அதான் அதையெல்லாம் படிக்க தமிழ்மீடியம் பிள்ளைங்க இருக்காங்களே என்று சொல்லி , சொல்லும் என்னையும் கேலி பொருளாய் தான் எண்ணுகிறார்கள்

சில நாட்களுக்கு முன் நான்ஒரு வலைபக்கத்தில்  படித்தேன்  “டிஸ்கவரி சேனல்ல  கூட தமிழ் பேசுறாங்க.  ஆனா நம்ம தமிழில் பேசுனா டிஸ்கவரி சேனல் ஆர்ட்டிஸ்ட் மாதிரி பாக்குறாங்கன்னு.”

என்னே தமிழுக்கு வந்த சோதனை????????


                        

No comments:

Post a Comment