Tuesday, 9 December 2014

பள்ளி முதல்வர்

                                           

நான் எனது பழைய பள்ளியை இன்னும் நேசிக்கிறேன். ஏனெனில் அதற்கு காரணம் எனது பள்ளி முதல்வர்.

நான் எட்டாம் வகுப்பு ஆண்டுத் தேர்வு எழுதி முடித்த போது என்னை அழ வைக்கும் ஒரு தகவல் வந்தது. எனது பள்ளி முதல்வர்  மஞ்சள் காமாலையின் காரணமாக இறந்து விட்டார்.

ஒரு புறம் பயம்...அச்சம்....ஏமாற்றம்.....வருத்தம் எல்லாம் கலந்த கலவையான உணர்வுக்குள் நான் தள்ளப்பட்டேன்.

ஏனெனில் அவர் ஒரு அன்புபெட்டகம்.மாணவர்களைக் கையாள்வதில் நிபுணர். ஆனால் எப்படியும் ஒரு புதிய முதல்வர் எங்களுக்கு வருவார். அவர் இவர் போல இருப்பார் என்று சொல்ல முடியாது.

எனவே புதியவர் குறித்த என் பயம் அதிகமானது. ஓரிரு நாளில் புதிய முதல்வர் வரப் போகிறார் என்றும் அவர் எப்போதும் குச்சியும் (பிரம்பு) கையுமாகத்தான் அலைவார் என்றும் தேவைக்கு அடிப்பதைத் தவிர தேவையில்லாமலும் அடிக்கடி அடிப்பார் என்றும் அனைத்து ஆசிரியர்களும் பயம் காட்ட ஆரம்பித்தனர். சும்மாவே நடுங்கிக் கொண்டிருந்த என் போன்றவர்களுக்கு மேலும் உதறல் எடுத்தது.

எனது தோழிகளும் விடாமல் புதிய முதல்வர் அப்படியாம், இப்படியாம் என்று தாங்கள் கேட்ட கதைகளையும் சில சமயம் கேட்காமல் தாங்களே உருவாக்கிய கதைகளையும் கூறிக் கொண்டே இருந்தனர்.

நான் பயந்து கொண்டே தான் ஒன்பதாம் வகுப்பிற்குள் நுழைந்தேன்.

முதல் நாள் அவரைப் பார்த்தபோது கொஞ்சம் மிடுக்கு, கம்பீரம் என்று தமிழில் ஏதேதோ சொல்வார்களே அப்படித்தான் தோன்றினார். ஆனாலும் பயமும் இருந்தது.

ஆனால் அவர்எங்கள் வகுப்பிற்கு முதன்முதலாய் வந்த போது ஆசிரியர் சொன்னது கட்டுக் கதைகளாகத்தான் இருக்க வேண்டும் என்று என் மனம் சொன்னது. ஆனாலும் எங்களை அச்சுறுத்தும் பணியை ஆசிரியர்கள் விடவே இல்லை.

அவர் பெயரில் உள்ள அருளை அவர் எப்போதும் தனக்குள் வைத்திருந்தார்.

இன்றைய நாளில் எங்கேனும் மாணவர்களைக் கையாளத் தெரியாத தனக்குக் கீழ் உள்ள ஆசிரியர்க்ளைக் கையாளத் தெரியாமல் யாரேனும் இருந்தால் எனக்கு சட்டென்று அவர் ஞாபகம் தான் வரும். அந்த அளவுக்கு எங்கள் மீது அன்பும், நட்பும், நேயமும், கொண்டவர். இன்னும் நான் சிறு பிள்ளையாக இருப்பதால் அவரைப் பற்றி வர்ணிக்க எனக்குத் தெரியவில்லை என்றே எண்ணுகிறேன்.

எல்லாப் பள்ளிகளிலும்  மாணவர்கள் மாணவிகளைக் கலாய்ப்பது  தவிர்க்க இயலாத்து தான். ஆனால் அவர்களை இவர் ஆற்றுப் படுத்திய விதமும் கையாண்ட விதமும் இன்னும் நான் வேறு பள்ளியில் படிக்கிறேன் என்றாலும் மறக்க முடியவில்லை. எப்போதும் பெண் பிள்ளைகள்ஒரு சில ஆண்பிள்ளைகளால் துயரத்திற்குள் தள்ளப் படுகிறார்கள் தான். ஆனால் அவர் அதனை மிகச் சரியாக கண்டுபிடித்து தண்டிப்பார். அல்லது கண்டிப்பார். அந்தப் பள்ளியில் நான் படித்த வரை ஆண் பிள்ளைகள் இந்த அளவுக்கு தொல்லை கொடுப்பதில்லை. அது எங்கள் முதல்வரின் கண்ணுக்கு எப்படித்தான் தெரியுமோ....அவர்களைக் கூப்பிட்டு அற்புதமாக கவுன்சிலிங் செய்து அனுப்புவார். அவர் பாணியை எல்லோரும் கையாண்டால் பள்ளியில் பெண் குழந்தைகள் மனப் புழுக்கம் கொஞ்சமேனும் குறையும் என்று தோன்றுகிறது.

அவர் பற்றி ஒரு முக்கிய நிகழ்வை நான் உங்களுக்குச் சொல்லக் கடமைப் பட்டுள்ளேன்.........தேர்வு காலமாகையால் எனக்கு நானே கணிணி கொடுக்கப்பட்ட நேரம் முடிந்தது...எனவே தொடரும்...

பின் குறிப்பு....இறந்து போன பள்ளி முதல்வர். திரு ஆரோக்கியசாமி

எங்களின் இனிய பள்ளி முதல்வர். திரு  அருள் பிரான்சிஸ்

எனது பழைய பள்ளி எஸ்.எஃப்எஸ்






No comments:

Post a Comment